Friday, April 17, 2009

நேனோ-ஒரு சரித்திரத்தின் வரலாறு (பாகம் 3)

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ப்ராஜக்டின் கருப்பு பக்கங்கள் என சிங்கூர் பிரச்சனையைச் சொல்லலாம். எளிதில் அசராத ரத்தன் டாடாவையே உணர்ச்சி வயப்பட்டு பேட்டி கொடுக்க வைத்தது இந்த பிரச்சினை. அப்போதுதான் வெற்றியை சுவைக்க ஆரம்பித்திருந்த அந்த ப்ராஜக்டிற்கு இது மிகப் பெரிய சவாலாகவே அமைந்தது. ரத்தன் டாடாவே இந்த காருக்கு 'டெஸ்பைட் மம்தா (Despite Mamtha)' என்று பெயர் வைக்க இருந்ததாக நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் விளையாட்டுக்கள் சிங்கூரில் உச்சகட்ட அரங்கேற்றத்தில் இருந்த அதேசமயத்தில் புனேயில் இவர்கள் விலையை குறப்பதற்கான அனைத்து நடவடிகைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஆல்டர்நேடிவ் ஃப்யூல் லைன்ஸ், பிளாஸ்டிக்கை சிறந்த முறையில் உபயோகித்தல், சிறந்த முறையில் விளக்குகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளை அவர்கள் கண்டறிந்திருந்தனர்.

இரு சக்கர வாகனங்களும் இந்த ப்ராஜக்டிற்கு தூண்டுகோலாக இருந்ததனால், இரு சக்கர வாகன உருவாக்கத்தில் அனுபவம் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். ராகேஷ் மிட்டல், யமாஹா நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் இரு சக்கர வாகனத்தில் பயன்படும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலை உபயோகப்படுத்தும் உத்தியை கண்டுபிடித்தார். சஸ்பென்ஸன் சிஸ்டம், கேபிள்ஸ், விளக்குகள் போன்றவை இரு சக்கர வாகனங்களின் முறையை ஒட்டியே அமைக்கப்பட்டன.

இப்படி பல்வேறு இடங்களிலிருந்து ஐடியாக்கள் குவிந்த வண்ணமிருக்க, அவர்கள் விலை குறைக்க மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திய இன்னொரு விஷயம் காரின் இருக்கைகள். இந்த பிரச்சனைக்கு தீர்வு ரத்தன் டாடாவாலேயே அமைந்தது. சாப்பர் (Chopper) ஓட்டுவதில் அனுபவம் வாய்ந்தவரான ரத்தன் டாடா மும்பைக்கும், புனேக்கும் அடிக்கடி தானே ஓட்டிச் சென்றிருக்கிறார்). நேனோவின் இருக்கையையும், விண்டோ வைண்டிங் முறையையும் (Window winding mechanism) ஹெலிகாப்டரில் இருக்கும் முறையை அடிப்படையாக கொண்டே அமைத்தார்.

ஜப்பானிய குறை தீர்க்கும் முறையான 'போகா யோக்' (Poka yoke - mistake proofing) அங்கே நடைமுறைப் படுத்தப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு காம்பனன்ட்டிலும் உள்ள பாகங்களை குறைப்பதன் மூலம் குறைந்த விலை காரை அவர்கள் உருவாக்கி கொண்டிருந்தனர். சில சமயம் முடிவுகள் அவர்களே பிரமிக்கும் வகையில் அமைந்தன.

ஒரு 'நிறைவேறாக் கனவு' நிஜமாகிக் கொண்டிருந்த அதே வேளையில், காரைப் பற்றிய சந்தேகங்களும் மனக் குறைகளும் வெளியுலகில் வளர்ந்து கொண்டே இருந்தன. அவர்கள் வெற்றியை நெருங்க, நெருங்க காரைப் பற்றிய வதந்திகளும் ஊடகங்களில் கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தன. இவற்றில் பெரும்பாண்மையானவை காரைக் குறை காண்பவையாகவோ, சந்தேகம் கொள்பவையாகவோ இருந்தன. சுற்றுச் சூழல் வல்லுநர்களோ 1 லட்ச ரூபாயில் உள்ள கார் இந்திய போக்குவரத்து முறையில் ஏற்படுத்தும் நெருக்கடியையும், சுற்றுசூழலில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றிய சந்தேகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

இந்தியாவில் மட்டும் இவர்கள் பிரச்சனையை சந்திக்க வில்லை. உலக அளவில் கேலியையும், கிண்டலையையும் சந்தித்தனர். சுசூகி நிறுவனமோ, அவர்கள் என்ன ஒரு மூன்று சக்கர வண்டியை, ஸ்டெப்னியோடு இருக்கிற மாதிரி உருவாக்கிவிட்டு கார்னு பேர் வைக்கப் போறாங்களான்னு நையாண்டி செய்தது. 2006ன் ஆரம்பத்தில் கூட சுசூகி நிறுவனம் 1 லட்ச ரூபாயில் நம்பகத்தன்மை கொண்டகாரை உருவாக்குதல் இயலாத என அறிவித்தது.

ஜனவரி 10, 2008, டெல்லியில் நடந்த அந்த ஆட்டோ எக்ஸ்போக்கு 10 நாட்கள் முன்பாகவே ரத்தன் டாடா தனது குழுவினருடன் இணைந்து ஒரு சரித்திரத்திற்கான முடிவுரையை எழுத ஆரம்பித்தார். ஊடகங்கள் உச்ச கட்ட பரபரப்பில் இருந்த அதேசமயத்தில், காரின் ஸ்டைல், டிசைன், சிறப்பம்சம் பற்றிய பரபரப்பு செய்திகள் வந்துகொண்டிருந்த சமயத்தில், மூன்று நேனோ கார்கள் டெல்லிக்கு கண்டெய்னர் மூலம் அனுப்பப்பட்டு, லாஞ்ச் செய்யப்படும் வரை யாராலும் பார்க்கப் படாமலேயே (முடியாமலேயே) இருந்தது.

ஜனவரி 10, 2008, இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான் ரத்தன் டாடா, வெள்ளை நிற நேனோவை ஸ்டேஜிற்கு ஓட்டி வந்து உலகிற்கு அறிமுகப் படுத்தினார். சுற்றியிருந்த கூட்டம் மெய் மறந்து ஆர்பரித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், உடலளவில் மட்டும் சோர்ந்திருந்த ரத்தன் டாடா, மைக்கில் சொன்ன வார்த்தை 'A Promise is a Promise' - இந்தக் காரின் விலை 1 லட்சம் மட்டுமே என்றதில் பலரது மனதை கொள்ளை கொண்டு விட்டார்.

சரித்திரத்தை சாதித்த பெருமையால் அவர்கள் திளைத்திருக்க இரு வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் பேசிக் கொண்டார்கள், இந்த சமயத்தில் நாம் இங்கு இருக்க அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று. இன்னொரு பத்திரிக்கையாளர் புன்னகையுடன், ஆமாம்! நாளை நம் பேரக்குழந்தைகளிடம் அந்த சமயத்தில் நாம் அங்கேதான் இருந்தோம்னு பெருமையா சொல்லிக்கலாம் என்று சிலாகித்தார்!

நேனோவின் வரவு இண்டஸ்ட்ரியில் பெருத்த மாற்றங்களை உண்டு பண்ணியது. 'டெட்ராய்ட்' நிறுவனம் இந்திய கார் மார்க்கெட்டில் நுழையும் எண்ணத்தை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறது இப்போது. ஃபோர்டு நிறுவனத்தின் தலைவரோ, எந்த நிறுவனம் சரியாக 100 வருடங்களுக்கு முன்பாக 'மாடல் டி' என்ற காரின் மூலம் உலகளவில் புரட்சியை ஏற்படுத்தியதோ, அதன் தலைவர் நேனோவை அனைத்து விதிகளையும் தகர்த்தெறிந்த பொருளாக பார்க்கிறார். பிரம்மிக்ககூடிய மரியாதை ரத்தன் டாடாவின் மேல் ஏற்படுவதாக சிலாகிக்கிறார்.

மார்ச் 5, 2008ல் இதே நேனோவை ஜெனீவாவில் நடந்த ஆட்டோ ஷோவில் லாஞ்ச் செய்யப்பட்ட பொழுது ஆஸ்டான் மார்டினின் (Aston Martin) சி.இ.ஓ டேவிட் ரிச்சர்ட்ஸ் ரவி காந்தின் கையை குலுக்கியவாறே, இங்கு பல அழகான கார்கள் இருந்தாலும், நீங்கள் ஒட்டு மொத்த கூட்டத்தையும் உங்கள் பக்கம் திருடி விட்டீர்கள் என்று பாரட்டுகிறார்.

அதே சமயம் சில முணுமுணுப்புகளும் இல்லாமலில்லை. நேனோவில் ஏர்கண்டிஷனிங்கோ, பவர் ஸ்டியரிங்கோ, ஏர் பேக்ஸோ, வேறு சிறப்பம்சங்களோ இல்லை, இதை யார் வாங்கப் போகிறார்கள் என்று சீன கார் நிறுவனமான (BYD) குறை கூறும் சமயத்தில், ரத்தன் டாடாவோ நேனோவை, இது வெறும் 1 லட்ச ரூபாய் காரில்லை, பல்வேறு உயர்ந்த வகை மாடல்களை குறைந்த விலையிலும் அதே சமயம் அதிக லாபத்தில் உற்பத்தி செய்யவும், விற்கவும் அடிப்படை என்கிறார். நேனோவை அடிப்படயாகக் கொண்டு டாடா நிறுவனம் எலக்ட்ரிக் காரையும், ஹைப்ரிட் காரையும் உற்பத்தி செய்யப் போவதாக தெரிவிக்கிறார்.

ஜாக்குவாரையும் (Jaquar), லாண்ட் ரோவரையும் வாங்க நினைக்கும் அதே சமயத்தில்தான் நேனோவையும் டாடா நிறுவனம் வெளியிட்டது. அது மட்டும் நடந்தால் டாடா நிறுவனம் ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள காரையும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரையும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக விளங்கும்.

இதுவரை இரு நாடுகள் டாடாவின் நேனோ கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தொடங்க அழைப்பு விடுத்துள்ளன. தவிர அந்நாடுகள் டாடா நிறுவனம் R&D க்காக செய்த செலவுகளை ஏற்கவும் முன் வருகின்றன. டாடா என்ற பிராண்டை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பதிய செய்து விட்டனர் நேனோவின் மூலம். நேனோவை லாஞ்ச் செய்யும் போது ஏற்பட்ட பப்ளிசிட்டியின் மதிப்பு ஏறக்குறைய 500 கோடி இருக்கும் என்று கணித்துள்ளனர்.

இன்னும் நேனோ கடக்க வேண்டிய தூரம் மிச்சமிருக்க, அந்த குழு கடைசி கட்டவிலை குறைப்பு உத்தியை டிஸ்ட்ரிபியூஸன் சிஸ்டத்தில் ஆராய்ந்து கொண்டிருக்க, ரத்தன் டாடா, எந்தவொரு மனிதனின் லட்சியங்களும், கனவுகளும் எளிதில் தளர்ந்து விடாதோ, அந்த மனிதன் இந்த கார் இன்னும் என்னை முழுமையாக திருப்திபடுத்தவில்லை என்கிறார்.

ஜனவரி 2008ல், நேனோவை வெளியுலகிற்கு அறிமுகப் படுத்தியிருந்தாலும், இப்போது (மார் 23ல்) நேனோவை சந்தைக்கு கொண்டு வந்திருப்பது பல விதங்களில் புருவங்களை உயர்த்த வைப்பதோடு இல்லாமல், வெவ்வேறு விதமான நிர்வாக சூட்சுமங்களையும், விற்பனைத் தந்திரங்களையும் உலகிற்கும் முக்கியமாக அமெரிக்காவிற்கு சொல்லிக் கொடுக்கிறது.

ஆம், நேனோ வெளிவந்திருக்கிற நேரம் ஒன்றும் சாதாரணமானதல்ல, அமெரிக்க கார் உற்பத்தியில் ஜாம்பவான்களான ஜிஎம், க்ரைஸ்லர் மற்றும் உலகின் முதல் மக்கள் காருக்கான சொந்தக்காரரான ஃபோர்டு நிறுவனம் போன்றவை தனது வாழ்வின் மிகக் கடுமையான சோதனையை சந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் நேனோ வெளிவந்திருக்கிறது.

No comments:

Post a Comment