Friday, April 24, 2009

அப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்- சிறுகதை

காலை 7 மணிக்கெல்லாம் பையன் ரெடியாகி நின்று கொண்டிருந்தான் அவனது கிரிக்கெட் பையுடன். இன்று ஞாயிற்றுக்கிழமை, அவனுக்கு கிரிக்கெட் பயிற்சி வகுப்பு இருக்கிறது டாவ்ஷன் மைதானத்தில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அவனை பயிற்சிக்கு அழைத்து செல்வேன். அங்கேயே மூன்று மணி நேரம் இருந்து அவன் விளையாடும் அழகை ரசிப்பேன். 7 வயதாக இருந்தாலும், அவனுக்குள் இருக்கும் திறமையை கண்டு பெருமிதம் கொண்டள்ளேன் பல முறை.

"அப்பா...சீக்கிரம் வாங்க....டைம் ஆகுது." என்னை இழுத்தான் ரோஷன். நானும் அவனும் விளையாட்டு திடலை அடைந்தோம். இந்த பயிற்சி வகுப்பில் கிட்டதட்ட 20 பேருக்கு மேல் சிறுவர்கள் வந்து பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். பல பள்ளிபோட்டிகளிலும், மாவட்ட போட்டிகளிலும் ஆட நிறைய திறன்மிக்க விளையாட்டாளர்களை உருவாக்கியுள்ளது இப்பயிற்சி வகுப்பு. அங்கே 9 மணிக்கு இருந்தால் போதும். ஆனால் ரோஷன் 7:30 மணிக்கே என்னை அழைத்துபோக சொல்வான். அவனது ஆர்வத்திற்கு நான் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை.

இரண்டு மூன்று காக்கா குருவிகளின் சத்தம், சில நாய்கள் ஓடிகொண்டிருந்தன- என சுற்றுசூழல் அமைந்திருந்தது. பனி விலகும் நேரம். உடற்பயிற்சி செய்ய அருமையான தருணம். வீட்டிலிருந்து போட்டுவந்த காலணியை கழற்றிவைத்து விட்டு புதிதாக அவனது பயிற்சிவிப்பாளர் வாங்கி கொடுத்த ரீபோக் ஷூவை போட்டு கொண்டான். ரீபோக் ஷூ- ரொம்ப விலையாம், உயர்ந்த தரமிக்க ஷூவாம். ரோஷன் சொல்லி தான் எனக்கு தெரியும். ஆனா என்னால் வாங்கி கொடுக்க வசதி இல்லை.

"அப்பா.... நான் 3 ரவுண்டு ஓடிட்டு வரேன்." என்று சொல்லி முடிப்பதற்குள் கிளம்பிவிட்டான். விளையாட்டில் திறமை இருந்தாலும், உடற்பயிற்சி தேவை. அப்போது தான் உடல் வலிமை பெறும். கிரிக்கெட் போன்ற விளையாட்டு ரொம்ப நேரம் விளையாட வேண்டிய விளையாட்டு என்பதால் உடலில் தெம்பு ரொம்ப முக்கியம். அதை நன்கு அறிந்தவன் ரோஷன். ஓடி முடித்துவிட்டு, கால் தசைகளுக்கு, கைகளுக்கு உகந்த சிறு சிறு பயிற்சிமுறைகளை தானாகவே செய்தான்.

அவன் ஒவ்வொரு அசைவையும் கண்கொட்டாமல் ரசிப்பேன் ஒவ்வொரு வாரமும். 9 மணியை நெருங்க, மற்ற சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள், பயிற்சிவிப்பாளர், சில இணை பயிற்சிவிப்பாளர் என பலர் வர ஆரம்பித்தனர். ஒவ்வொரு வாரமும் சில பெற்றோர்கள் தவறாமல் வந்துவிடுவார்கள், அதில் தெரிந்தவர்கள் சிறு புன்னகையிடுவார்கள். சில அப்பாக்கள் என்னிடம் வந்து பேசுவார்கள். அதில் ஒருவர்தான் குமார்.

குமார், "என்ன சார், எப்படி இருக்கீங்க?....என்னங்க இது IPL போட்டிகள வேற இடத்துக்கு மாத்திட்டாங்க?" அவர் கையில் வைத்திருந்த பைகளையும் தண்ணீர் பாட்டில்களையும் கீழே வைத்துவிட்டு என் அருகே உட்கார்ந்தார்.

"எங்க இருந்தா என்ன? நம்ம... எப்படியும் டீவியில தான் பாக்க போறோம்." சிரித்து கொண்டே பதில் அளித்தேன்.

"அதுவும் சரி தான்" என்றவர் வேலைகளை பற்றியும், அவர் வீட்டு லோன் பிரச்சனைகளை பற்றியும் பேசி கொண்டிருந்தார். இந்த பிரச்சனைக்குரிய விஷயங்களை பற்றி பேசுவது எனக்கு பிடிக்காது. இருந்தாலும், கேட்க வேண்டிய சூழ்நிலையில் மாட்டி கொண்டேன். அவர் சொன்னதற்கு தலையாட்டினேன். ஆனால், எனது சிந்தனை, கவனம், பார்வை எல்லாம் ரோஷனின் பயிற்சியின் மீதே இருந்தது. பயிற்சிவிப்பாளர் சொன்னவற்றை சிறுவர்கள் பின்பற்றுவதும், விளையாடுவதும் எனக்கு எல்லையில்லா சந்தோஷத்தை கொடுத்தது. ஒவ்வொரு முறையும் பயிற்சிவிப்பாளர் அவனை பாராட்டும்போது, எட்டி உட்கார்ந்து பார்த்தாலும் உள்ளூர ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும்.

ரோஷன் ஒரு பேட்ஸ்மேன். பந்து எந்த வேகத்தில் வந்தாலும் அதை கச்சிதமாக அடிப்பதில் வல்லவன். ஒரு சின்ன கேம் விளையாடினார்கள் அன்று. 5 ஓவர்கள் கேம். 4 பந்துகளில் 17 ரன்களை எடுத்தான் ரோஷன். தண்ணீர் இடைவேளையின் போது என்னிடம் பெருமையாக கூறியதை ரசித்து கேட்டேன்.

"அப்பா.. இன்னிக்கு கேம்ல நான் தான் டாப். கவர் டிரைவ்ல ஒரு ஷாட். அப்பரம் லெக் சைட்ல pull பண்ணி இன்னொரு பவுண்டரி. மொத்தம் 2 பவுண்டரி. 1 சிக்ஸர். அப்பரம் கடைசி பந்துல 3 ரன் எடுத்தேன்." வேர்வை முகத்தில் வழிந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மூச்சுயிறைக்க பேசி முடித்தான்.

நாள் முழுக்க விளையாட சொன்னாலும் விளையாடுவான் ரோஷன். இவனின் ஆசை கனவு எல்லாம் கிரிக்கெட் தான். எனக்கும் இவன் ஒரு விளையாட்டு வீரராக வரவேண்டும் என்பதே ஆசை. கேம் முடிந்து 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்தார்கள். அந்நேரத்திலும்கூட பேட்டிங், பந்தை பிடிப்பது, பந்தை ஸ்டம்பை பார்த்து அடிப்பது போன்ற பயிற்சிகளை சில சிறுவர்கள் அவர்களின் அப்பாவின் உதவியோடு பயிற்சி செய்தார்கள்.

ரோஷன் குமாரோடு பயிற்சி எடுத்தான். அச்சமயம் பயிற்சிவிப்பாளர் என்னிடம் பேசினார்.

"சார்... ரோஷன்.. ரொம்ப திறமசாலி. ரொம்ப கெட்டிக்காரன். இப்படியே அவன் விளையாடினால், அடுத்த 13 வயதுக்கு உட்பட்டோர் தமிழ்நாட்டு அணியில தேர்ந்தெடுக்கப்படுவான்... நல்ல எதிர்காலம் இருக்கு ரோஷனுக்கு." என்று என் தோளில் தட்டியபடி சொன்னார்.

என் மகிழ்ச்சிகளை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை என்பதால் என் ஆனந்த கண்ணீர் வர்ணிக்க ஆரம்பித்தன. கண்ணீரை துடைத்து கொண்டேன்.
பயிற்சி எல்லாம் முடிய மதியம் 12 ஆனது. பைகளை எடுத்து கொண்டோம். வீட்டிற்கு செல்லும் வழியில் தோனியின் பெரிய கட் அவுட் ஒன்று கம்பீரமாக சாலையை அலங்கரித்தது. சிவப்பு சிக்னல் இருந்ததால், வண்டியை நிறுத்தினேன். அந்த கட் அவுட்டை அனாந்து பார்த்த ரோஷன் என் முதுகை தட்டி, "அப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்!" என்றான்.

பிறவியிலே கால் ஊனமுற்றவனாக பிறந்த நான், அவ்வினாடி என் மகன் கூறியதற்கு என்னால் சொல்லமுடிந்த பதில், "நீ நிச்சயம் தோனி மாதிரி வருவே!"

என் மூன்று சக்கர வண்டியில் பயணத்தை தொடர்ந்தேன்.

Friday, April 17, 2009

நேனோ-ஒரு சரித்திரத்தின் வரலாறு (பாகம் 3)

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ப்ராஜக்டின் கருப்பு பக்கங்கள் என சிங்கூர் பிரச்சனையைச் சொல்லலாம். எளிதில் அசராத ரத்தன் டாடாவையே உணர்ச்சி வயப்பட்டு பேட்டி கொடுக்க வைத்தது இந்த பிரச்சினை. அப்போதுதான் வெற்றியை சுவைக்க ஆரம்பித்திருந்த அந்த ப்ராஜக்டிற்கு இது மிகப் பெரிய சவாலாகவே அமைந்தது. ரத்தன் டாடாவே இந்த காருக்கு 'டெஸ்பைட் மம்தா (Despite Mamtha)' என்று பெயர் வைக்க இருந்ததாக நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் விளையாட்டுக்கள் சிங்கூரில் உச்சகட்ட அரங்கேற்றத்தில் இருந்த அதேசமயத்தில் புனேயில் இவர்கள் விலையை குறப்பதற்கான அனைத்து நடவடிகைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஆல்டர்நேடிவ் ஃப்யூல் லைன்ஸ், பிளாஸ்டிக்கை சிறந்த முறையில் உபயோகித்தல், சிறந்த முறையில் விளக்குகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளை அவர்கள் கண்டறிந்திருந்தனர்.

இரு சக்கர வாகனங்களும் இந்த ப்ராஜக்டிற்கு தூண்டுகோலாக இருந்ததனால், இரு சக்கர வாகன உருவாக்கத்தில் அனுபவம் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். ராகேஷ் மிட்டல், யமாஹா நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் இரு சக்கர வாகனத்தில் பயன்படும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலை உபயோகப்படுத்தும் உத்தியை கண்டுபிடித்தார். சஸ்பென்ஸன் சிஸ்டம், கேபிள்ஸ், விளக்குகள் போன்றவை இரு சக்கர வாகனங்களின் முறையை ஒட்டியே அமைக்கப்பட்டன.

இப்படி பல்வேறு இடங்களிலிருந்து ஐடியாக்கள் குவிந்த வண்ணமிருக்க, அவர்கள் விலை குறைக்க மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திய இன்னொரு விஷயம் காரின் இருக்கைகள். இந்த பிரச்சனைக்கு தீர்வு ரத்தன் டாடாவாலேயே அமைந்தது. சாப்பர் (Chopper) ஓட்டுவதில் அனுபவம் வாய்ந்தவரான ரத்தன் டாடா மும்பைக்கும், புனேக்கும் அடிக்கடி தானே ஓட்டிச் சென்றிருக்கிறார்). நேனோவின் இருக்கையையும், விண்டோ வைண்டிங் முறையையும் (Window winding mechanism) ஹெலிகாப்டரில் இருக்கும் முறையை அடிப்படையாக கொண்டே அமைத்தார்.

ஜப்பானிய குறை தீர்க்கும் முறையான 'போகா யோக்' (Poka yoke - mistake proofing) அங்கே நடைமுறைப் படுத்தப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு காம்பனன்ட்டிலும் உள்ள பாகங்களை குறைப்பதன் மூலம் குறைந்த விலை காரை அவர்கள் உருவாக்கி கொண்டிருந்தனர். சில சமயம் முடிவுகள் அவர்களே பிரமிக்கும் வகையில் அமைந்தன.

ஒரு 'நிறைவேறாக் கனவு' நிஜமாகிக் கொண்டிருந்த அதே வேளையில், காரைப் பற்றிய சந்தேகங்களும் மனக் குறைகளும் வெளியுலகில் வளர்ந்து கொண்டே இருந்தன. அவர்கள் வெற்றியை நெருங்க, நெருங்க காரைப் பற்றிய வதந்திகளும் ஊடகங்களில் கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தன. இவற்றில் பெரும்பாண்மையானவை காரைக் குறை காண்பவையாகவோ, சந்தேகம் கொள்பவையாகவோ இருந்தன. சுற்றுச் சூழல் வல்லுநர்களோ 1 லட்ச ரூபாயில் உள்ள கார் இந்திய போக்குவரத்து முறையில் ஏற்படுத்தும் நெருக்கடியையும், சுற்றுசூழலில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றிய சந்தேகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

இந்தியாவில் மட்டும் இவர்கள் பிரச்சனையை சந்திக்க வில்லை. உலக அளவில் கேலியையும், கிண்டலையையும் சந்தித்தனர். சுசூகி நிறுவனமோ, அவர்கள் என்ன ஒரு மூன்று சக்கர வண்டியை, ஸ்டெப்னியோடு இருக்கிற மாதிரி உருவாக்கிவிட்டு கார்னு பேர் வைக்கப் போறாங்களான்னு நையாண்டி செய்தது. 2006ன் ஆரம்பத்தில் கூட சுசூகி நிறுவனம் 1 லட்ச ரூபாயில் நம்பகத்தன்மை கொண்டகாரை உருவாக்குதல் இயலாத என அறிவித்தது.

ஜனவரி 10, 2008, டெல்லியில் நடந்த அந்த ஆட்டோ எக்ஸ்போக்கு 10 நாட்கள் முன்பாகவே ரத்தன் டாடா தனது குழுவினருடன் இணைந்து ஒரு சரித்திரத்திற்கான முடிவுரையை எழுத ஆரம்பித்தார். ஊடகங்கள் உச்ச கட்ட பரபரப்பில் இருந்த அதேசமயத்தில், காரின் ஸ்டைல், டிசைன், சிறப்பம்சம் பற்றிய பரபரப்பு செய்திகள் வந்துகொண்டிருந்த சமயத்தில், மூன்று நேனோ கார்கள் டெல்லிக்கு கண்டெய்னர் மூலம் அனுப்பப்பட்டு, லாஞ்ச் செய்யப்படும் வரை யாராலும் பார்க்கப் படாமலேயே (முடியாமலேயே) இருந்தது.

ஜனவரி 10, 2008, இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான் ரத்தன் டாடா, வெள்ளை நிற நேனோவை ஸ்டேஜிற்கு ஓட்டி வந்து உலகிற்கு அறிமுகப் படுத்தினார். சுற்றியிருந்த கூட்டம் மெய் மறந்து ஆர்பரித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், உடலளவில் மட்டும் சோர்ந்திருந்த ரத்தன் டாடா, மைக்கில் சொன்ன வார்த்தை 'A Promise is a Promise' - இந்தக் காரின் விலை 1 லட்சம் மட்டுமே என்றதில் பலரது மனதை கொள்ளை கொண்டு விட்டார்.

சரித்திரத்தை சாதித்த பெருமையால் அவர்கள் திளைத்திருக்க இரு வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் பேசிக் கொண்டார்கள், இந்த சமயத்தில் நாம் இங்கு இருக்க அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று. இன்னொரு பத்திரிக்கையாளர் புன்னகையுடன், ஆமாம்! நாளை நம் பேரக்குழந்தைகளிடம் அந்த சமயத்தில் நாம் அங்கேதான் இருந்தோம்னு பெருமையா சொல்லிக்கலாம் என்று சிலாகித்தார்!

நேனோவின் வரவு இண்டஸ்ட்ரியில் பெருத்த மாற்றங்களை உண்டு பண்ணியது. 'டெட்ராய்ட்' நிறுவனம் இந்திய கார் மார்க்கெட்டில் நுழையும் எண்ணத்தை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறது இப்போது. ஃபோர்டு நிறுவனத்தின் தலைவரோ, எந்த நிறுவனம் சரியாக 100 வருடங்களுக்கு முன்பாக 'மாடல் டி' என்ற காரின் மூலம் உலகளவில் புரட்சியை ஏற்படுத்தியதோ, அதன் தலைவர் நேனோவை அனைத்து விதிகளையும் தகர்த்தெறிந்த பொருளாக பார்க்கிறார். பிரம்மிக்ககூடிய மரியாதை ரத்தன் டாடாவின் மேல் ஏற்படுவதாக சிலாகிக்கிறார்.

மார்ச் 5, 2008ல் இதே நேனோவை ஜெனீவாவில் நடந்த ஆட்டோ ஷோவில் லாஞ்ச் செய்யப்பட்ட பொழுது ஆஸ்டான் மார்டினின் (Aston Martin) சி.இ.ஓ டேவிட் ரிச்சர்ட்ஸ் ரவி காந்தின் கையை குலுக்கியவாறே, இங்கு பல அழகான கார்கள் இருந்தாலும், நீங்கள் ஒட்டு மொத்த கூட்டத்தையும் உங்கள் பக்கம் திருடி விட்டீர்கள் என்று பாரட்டுகிறார்.

அதே சமயம் சில முணுமுணுப்புகளும் இல்லாமலில்லை. நேனோவில் ஏர்கண்டிஷனிங்கோ, பவர் ஸ்டியரிங்கோ, ஏர் பேக்ஸோ, வேறு சிறப்பம்சங்களோ இல்லை, இதை யார் வாங்கப் போகிறார்கள் என்று சீன கார் நிறுவனமான (BYD) குறை கூறும் சமயத்தில், ரத்தன் டாடாவோ நேனோவை, இது வெறும் 1 லட்ச ரூபாய் காரில்லை, பல்வேறு உயர்ந்த வகை மாடல்களை குறைந்த விலையிலும் அதே சமயம் அதிக லாபத்தில் உற்பத்தி செய்யவும், விற்கவும் அடிப்படை என்கிறார். நேனோவை அடிப்படயாகக் கொண்டு டாடா நிறுவனம் எலக்ட்ரிக் காரையும், ஹைப்ரிட் காரையும் உற்பத்தி செய்யப் போவதாக தெரிவிக்கிறார்.

ஜாக்குவாரையும் (Jaquar), லாண்ட் ரோவரையும் வாங்க நினைக்கும் அதே சமயத்தில்தான் நேனோவையும் டாடா நிறுவனம் வெளியிட்டது. அது மட்டும் நடந்தால் டாடா நிறுவனம் ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள காரையும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரையும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக விளங்கும்.

இதுவரை இரு நாடுகள் டாடாவின் நேனோ கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தொடங்க அழைப்பு விடுத்துள்ளன. தவிர அந்நாடுகள் டாடா நிறுவனம் R&D க்காக செய்த செலவுகளை ஏற்கவும் முன் வருகின்றன. டாடா என்ற பிராண்டை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பதிய செய்து விட்டனர் நேனோவின் மூலம். நேனோவை லாஞ்ச் செய்யும் போது ஏற்பட்ட பப்ளிசிட்டியின் மதிப்பு ஏறக்குறைய 500 கோடி இருக்கும் என்று கணித்துள்ளனர்.

இன்னும் நேனோ கடக்க வேண்டிய தூரம் மிச்சமிருக்க, அந்த குழு கடைசி கட்டவிலை குறைப்பு உத்தியை டிஸ்ட்ரிபியூஸன் சிஸ்டத்தில் ஆராய்ந்து கொண்டிருக்க, ரத்தன் டாடா, எந்தவொரு மனிதனின் லட்சியங்களும், கனவுகளும் எளிதில் தளர்ந்து விடாதோ, அந்த மனிதன் இந்த கார் இன்னும் என்னை முழுமையாக திருப்திபடுத்தவில்லை என்கிறார்.

ஜனவரி 2008ல், நேனோவை வெளியுலகிற்கு அறிமுகப் படுத்தியிருந்தாலும், இப்போது (மார் 23ல்) நேனோவை சந்தைக்கு கொண்டு வந்திருப்பது பல விதங்களில் புருவங்களை உயர்த்த வைப்பதோடு இல்லாமல், வெவ்வேறு விதமான நிர்வாக சூட்சுமங்களையும், விற்பனைத் தந்திரங்களையும் உலகிற்கும் முக்கியமாக அமெரிக்காவிற்கு சொல்லிக் கொடுக்கிறது.

ஆம், நேனோ வெளிவந்திருக்கிற நேரம் ஒன்றும் சாதாரணமானதல்ல, அமெரிக்க கார் உற்பத்தியில் ஜாம்பவான்களான ஜிஎம், க்ரைஸ்லர் மற்றும் உலகின் முதல் மக்கள் காருக்கான சொந்தக்காரரான ஃபோர்டு நிறுவனம் போன்றவை தனது வாழ்வின் மிகக் கடுமையான சோதனையை சந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் நேனோ வெளிவந்திருக்கிறது.

Monday, April 6, 2009

நேனோ-ஒரு சரித்திரத்தின் வரலாறு (பாகம் 2)

ஆகஸ்ட் 2005, கீரீஷ் வாஹ், அந்த குழுவில் இணைந்தது ஒரு முக்கிய தருணம். கீரீஷ் வாஹ் - டாட்டாவின் ஏஸ் (கனரக வண்டி) உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர். அவர் இணைந்த போதுதான், டாட்டாவின் முதல் மூல் (Mule) உருவாகியிருந்தது. (மூல் (Mule) என்பது ஆட்டோமொபைல் பேச்சு வழக்கில் என்ஜின், ட்ரான்ஸ்மிஷன், எலக்ட்ரானிக் சென்சார் மற்றும் சில பாகங்கள் மட்டும் கொண்ட வண்டி - இது சோதனைக்காக மட்டுமே பயன்படுத்துவது). அப்போது அவர்கள் 20bhp சக்தி கொண்ட என்ஜினைத்தான் உபயோகித்தனர். நரேந்திரகுமார் ஜெயின், டாட்டா நிறுவனத்தின் முன்னோடிகளில் ஒருவரும், டாட்டாவின் முதல் கேஸோலைன் என்ஜின் (gasoline) உருவாக காரணமாக இருந்தவருமான இவர் 20bhp சக்தி கொண்ட என்ஜினை சோதனைக்குட்படுத்தி பார்க்க விரும்பினார். ஆனால் அது வெற்றி பெற வில்லை. முதல் இரண்டு வருடங்களில் குறைந்த விலை காருக்கான என்ஜினை உலகெங்கும் தேடி அலைந்ததில் கண்டறிந்தது என்னவென்றால், டாட்டாவின் குறைந்த விலை காருக்கான என்ஜின் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதுதான்!.

ஒரு மோட்டார் பைக்கின் என்ஜினை கூட அவர்கள் உபயோகித்து பார்த்தனர், ஆனால் எதுவும் திருப்திகரமாக அமைய வில்லை. அதன்பின் டிசைனிங் குழுவுடன் இணைந்து வெற்றுத் தாள்களில் புது என்ஜினை வடிவமைக்க ஆரம்பித்தனர். பின்புதான் அவர்கள் 20bhp சக்தி கொண்ட என்ஜினை வடிவமைக்க ஆரம்பித்தனர். பாதிப் பயணத்திலேயே அவர்கள் புரிந்து கொண்டனர், இது போதாது என்று. அதனால் அவர்கள் 554CC (27bhp) என்ஜினை வடிவமைக்க ஆரம்பித்தனர். ஆனால் அதுவும் திருப்திகரம்மாக அமையாததால் 586CC கொண்ட என்ஜினை அவர்கள் முயற்சி செய்தனர். அது ஓரளவு திருப்திகரமாக அமையவே மற்ற காரியங்கள் விரைவாக நடந்தேறியது. மூன்று விஷயங்களில் அவர்கள் தெளிவாக இருந்தனர், அவை விலை, பெர்ஃபார்மன்ஸ், ரெகுலேட்டரி கம்ப்ளையன்ஸ்.

ஒரு புறம் டாட்டா நிறுவனம், காரின் தொழில் நுட்பத்தில் ஈடுபட்டிருக்க, மறுபுறம் அதனுடைய இத்தாலிய டிசைன் ஹவுஸ் (I.D.E.A - இண்டிகாவை டிசைன் செய்தது இவர்கள்தான்) நேனோவின் டிசைன், ஸ்டைலிங்கில் ஈடுபட்டிருந்தனர்.

டிசைனிங்கில் ரத்தன் டாட்டா அவரது பங்கை அடக்கி வாசித்தாலும், அவருடைய பங்கு மிக முக்கியமானது என்கிறார் கீரீஷ் வாஹ். ஒவ்வொரு மூல் (Mule)சோதனையின் போதும் அவர் உடனிருந்தார், ஏன் லாஞ்ச் செய்வதற்கு சில நாட்கள் முன்பு கூட அவர் டிசைனில் சில மாற்றங்களை மேற்கொண்டார் என்கிறார் கீரீஷ் வாஹ்.

டிசம்பர் 2005ல் இரண்டாவது மூல் (Mule) சோதனை செய்யப்பட்டது. 2006ன் மத்தியில் முதல் புரோட்டோடைப் (அ) ஆல்ஃபா சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனை ஓரளவு வெற்றிகரமாகவே அமைந்தது. இருப்பினும் காரின் நீளத்தை சற்றே அதிகப்ப்டுத்தவும், இன்னும் சற்று ஸ்டைலாக்கவும் விரும்பினர் (100 mm). அப்படி என்றால் புது வடிவத்திற்கேற்ற அனைத்து பாகங்களையும் மீண்டும் ஒரு முறை உருவாக்க வேண்டும். அவர்கள் மீண்டும் டிராயிங் ஹாலுக்கு சென்றனர்.

அதுவரை பெரும்பாலும் தோல்விகளையே சந்தித்து வந்த அந்த குழுவிற்கு, மிகப் பெரிய சப்போர்ட் மேனேஜ்மென்ட்டிடமிருந்துதான்! தோல்விக்கான காரணத்தை அவர்கள் யார் தலையிலும் சுமத்த வில்லை! இதில் கடினம் என்னவென்றால் தாங்கள் சாதிக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையை கைவிடாமல் தொடர்வதுதான்.

எந்தவொரு மாடல் பிளானோ, பெஞ்ச்மார்க்கோ இல்லாததாலோ என்னவோ, ஒவ்வொருவரும் பலவித திட்டங்களை வைத்திருந்தனர். இதன் மிகப் பெரிய சவால் என்னவென்றால் அந்த திட்டங்களை ஒரு ஸ்பெக்குள் (Spec) கொண்டு வருவதுதான். ஒரே ஒரு ஒப்புக்கொள்ளக் கூடிய பெஞ்ச்மார்க் இருந்ததென்றால் அது மாருதி 800 தான். ஆனால் அதுவும் 2 லட்சத்திற்கும் அதிக விலையைக் கொண்டது.

சில சமயங்களில் அவர்கள் திரும்பத் திரும்ப சில கடினமான வேலைகளையே செய்ய வேண்டியிருந்தது. நரேந்திரகுமார் ஜெயின், ஏறக்குறைய 150 தெர்மோடைனமிக் ஸிமுலேசன்களை (ஒவ்வொன்றிற்கும் எட்டு முதல் பத்து மணி நேரம் ஆகும்) மேற்கொண்டார். Bodyshopல் ஏறக்குறைய 10 விதமான் ஃப்ளோர் பிளானை உருவாக்கினர்.

நேனோவின் முழு உடலும் இரண்டு முறையும், எஞ்ஜின் மூன்று முறையும், Bodyshopல் 10 விதமான் ஃப்ளோர் பிளானும், இருக்கைகள் பத்து முறையும், காரின் டேஷ் போர்டு ஒரே சமயத்தில் இரண்டு கான்செப்ட் ரன்னிங்…….. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் திரும்பத் திரும்ப திருப்தி அடையும் வரை செய்து கொண்டே இருந்தனர்.

நேனோவின் பின்னால் எஞ்ஜின் வைப்பது என்ற முடிவுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னராகவே அவர்கள் முடிவு செய்திருந்தனர். அவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்திய இன்னொரு விஷயம் உயரும் மூலப்பொருட்களின் விலை. உதாரணமாக ஸ்டீலின் விலை உயர்ந்து கொண்டே இருந்ததால், அவர்கள் ஸ்டீன் பயண்பாட்டை குறைத்து அதே சமயம் சிறந்த முறையில் உபயோகிக்கும் முறையையும் கண்டறிந்திருந்தனர்.

அக்டோபர் 2006, முடிவில் அவர்கள் சிறந்ததொரு என்ஜின் டிசைனை 624CC(34bhp) அடைந்தனர். ஒரு உயர் அழுத்த டை காஸ்ட் என்ஜின் இந்தியாவில் உருவாகுவது அதுதான் முதல் முறை!

நரேந்திரகுமார் ஜெயினின் புரோட்டோ டைப் என்ஜினாக உருமாற ஏறக்குறைய 5 மாதங்கள் ஆகின. இதற்காக அவர்கள் 10 பேடன்ட்ஸ் உரிமையை பதிவு செய்திருந்தனர். கார் உருவாக்கியிருந்த போது மொத்த பேடன்ட்ஸ் உரிமைகளின் எண்ணிக்கை 34. இன்னும் வரிசையில் சில நிற்கின்றன.

பாலசுப்ரமணியம் (Head of sourcing) கண்டிப்பாக அனைத்து வெண்டார்களாலும் வெறுக்கப்பட்ட மனிதராக இருந்திருப்பார். பல சூடான விவாதங்கள் அங்கே அரங்கேறியதற்கும், வெண்டார்களுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தற்கும் அதே சமயம் அவர்கள் விலை குறைக்கவும் அதற்கான தொழில் நுட்ப மாற்றங்களை செய்வதற்கும் காரண கர்த்தாவாக இருந்தார்.

ஏனெனில் குறைந்த விலை கார் என்ற கனவு நிறைவேற வெண்டார்களும் தங்களது பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அடுத்த கட்ட முதலீடோ, ரீ இன்ஜினியரிங்கோ செய்ய வேண்டியிருந்தது. அந்த முதலீட்டை திரும்பப் பெற அவர்களுக்கு வருடங்கள் பல கூட ஆகலாம். ஆனால் நிர்வாகம் அவர்கள் உடன் இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்பட்டது. இருப்பினும் அவர்களை சம்மதிக்க வைத்தது மிக கடினமான காரியம் என்பதை ஒப்புக் கொள்கிறார் பாலசுப்ரமணியம்.

வெற்றியை அப்போதுதான் சுவைக்க ஆரம்பித்திருந்த அவர்கள் வெளியுலகில் எதிர்கொண்ட சவால்கள் என்ன? நேனோவை அறிமுகப்படுத்திய போது கிடைத்த வரவேற்ப்பு எத்தகையவை? மீண்டும் விரைவில் பாகம் 3 ல்…………