Thursday, June 23, 2011

இன்றைய காதல் சுழல்

முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி-ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

Saturday, June 18, 2011

சொல்லாமல் விட்ட காதல்

திட்டமிட்டுச் செய்யாமல்
திடீர் தாக்குதல்
நடத்தி என்னைச்
சிறைப்பிடித்தாய்

போர்க்கைதிகளை
நியாயமாக நடத்த
சட்டம் உண்டு
ஆனால் உந்தன்
மனக்கைதி எனக்கு
என்ன உண்டு

தினமும் உனக்காகவே
அந்தச் சாலையில்
காத்துக் கொண்டிருக்கிறேன்

மக்களை நிராகரிக்கும்
அரசியல்வாதி போல
என்னை நிராகரித்துச் செல்கிறாய்

சூறாவளியில்
சிக்கிய பொருள்போல்
ஆனது என் நிலைமை

மீண்டும் மீண்டும்
உன்னை நோக்கி
படையெடுத்துக்
கொண்டிருக்கிறேன்
வெற்றி பெறுவேன்
என்ற நம்பிக்கையோடு

Friday, June 10, 2011

டீன்-ஏஜ் ஜாக்கிரதை...

தொழில்நுட்பம் என்கிறது நம்மளோட அறிவ வளத்துக்குறதுக்கும் தகவல்கள தெரிஞ்சுக்குறதுக்கும் உபயோகமா இருக்குற சாதனம் தான். ஆனா இன்னைக்குள்ள வாழ்க்கை முறைல இளைஞர்களோட வாழ்க்கைப் பாதையை வெகுவா மாத்துறது இந்த தொழில்நுட்பங்கள் தான்னு சொல்லலாம். முக்கியமான உதாரணமா இணையத்த சொல்லலாம். இளைஞர்கள்னு கூட சொல்ல முடியாது. சின்னப் புள்ளைய்ங்க கூட அசால்ட்டா இன்டர்நெட் யூஸ் பண்ணுதுங்க. கேம்ஸ் விளையாட்றதுல தொடங்கி பெரிய பெரிய விஷயங்களெல்லாம் தானா கத்துக்குதுக. அது நல்ல விசயமா இருந்தா பரவாயில்லை.. ஆனா தேவையில்லாத வேலையெல்லாம் இணையத்துல பண்றாய்ங்க.

தப்பான பேர்ல ச்சாட் பண்றதுல ஆரம்பிச்சு கண்ட கண்ட இணையதளத்த மேயுறது வரைக்கும் எல்லா 420 வேலையும்செய்றானுங்க.

என் பக்கத்து வீட்டுல குடியிருக்குறவங்களுக்கு பத்தாவது படிக்கிற ஒரு பையன் இருக்கான். அவங்களுக்குப் படிப்பறிவு கம்மி, ஆனாலும் நல்ல வசதியானவங்க. அவன் ஒரே பையன்குறதுனால அவன் கேட்டான்னு கம்ப்யூட்டர், செல்போனெல்லாம் வாங்கி குடுத்துருக்காங்க. அந்தப் பையன எனக்குச் சின்ன வயசுலருந்தே தெரியும்குறதுனால என்கிட்ட நல்லா பேசுவான்.

பாக்குறதுக்கு ரொம்ப அப்பாவி மாதிரி இருப்பான். ஆனா கம்ப்யூட்டர்ல உக்காந்துட்டான்னா எப்ப பாத்தாலும் ஆர்குட், ஃபேஸ்புக், ச்சாட்டிங்னு தான் அவனோட பொழுது கழியும். ஆரம்பத்துல நா கூட இவன ரொம்ப நல்ல்ல்வன்னு நெனச்சேன். ஆனா என்னோட தோழி ஒருத்திகிட்டயே தப்பான பேர்ல இவனோட ச்சாட்டிங் வேலைய காமிச்சு என்கிட்ட மாட்டிகிட்டான். அப்புறம் தான் தெரிஞ்சது, இவன் படிக்காம கண்ட கண்ட இணைதளமெல்லாம் நைட்ல பாக்குறன்னு. அது மட்டுமில்லாம ரெண்டு பொண்ணுங்ககிட்ட ச்சாட்டிங்கல லவ் டயலாக் விட்டுகிட்டு இருக்கான்னு தெரியவந்துச்சு. கூப்ட்டு கண்டிச்சேன். இவனுங்களுக்குத்தான் அட்வைஸ் பண்றவங்களப் பிடிக்காதே. என்கிட்ட பேசுறத நிறுத்திட்டான். அவங்க அம்மா கிட்ட சொன்னதுக்கு “அவன் சின்னப்புள்ளமா, அந்தளவுக்கெல்லாம் விவரம் இல்லாதவன், நீ வீணா எதையாவது சொல்லாத“னு என்கிட்ட கோவப்பட்டாங்க.

அவனுக்கு மிஞ்சிப்போனா பதினஞ்சு வயசு தான் இருக்கும். அவன கண்டிச்சாலும் அட்வைஸ் பண்ணினாலும் எடுத்துக்கொள்ளாத பருவம் இது. ஆனாலும் அவன தனியா கூப்ட்டு “சகோதரனா நெனச்சு உனக்கு ஒரே ஒரு அட்வைஸ் பண்றேன். கேக்குறதும் கேக்காததும் உன் இஷ்டம்“னு சொன்னேன். அவன் வழக்கமான ஏளனச் சிரிப்போட “ஆரம்பிச்சுட்டீங்களா“ங்குற மாதிரி பாத்தான்.

“இந்த வயசுல உனக்கு எல்லாமே சகஜமா தெரியலாம், இதுலென்ன தப்பிருக்கு?னு தான் தோணும். ஆனா ஒண்ணு மட்டும் மனசுல வச்சிக்க. சில வருஷத்துக்கப்புறம் ஒரு மெச்சூரிட்டி வரும்போது உன்னப்பத்தி நீ நெனச்சுப் பாக்குற நேரத்துல, பெருமையா நெனைக்கலனாலும் “நாமளா இவ்ளோ கேவலமா நடந்துகிட்டோம்“னு தோணிடக் கூடாது. அடுத்தவன் முன்னாடி நீ நல்லவன் மாதிரி நடிச்சிட்டுப் போயிடலாம். ஆனா உனக்கு நீ உண்மையா இரு. அந்தந்த வயசுல உனக்கு கெடைக்க வேண்டியதெல்லாமே கட்டாயம் கெடைக்கும். இப்போ உனக்குப் படிப்பு தான் முக்கியம். உங்கம்மா உன் மேல வச்சிருக்குற நம்பிக்கைய கெடுத்துக்காத. இதுனால உனக்கு என் மேல வெறுப்பு கூட வரும். ஆனா சொல்லனும்னு தோணுச்சு சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்“னு நேருக்கு நேரா அவனோட கண்ணப் பாத்து சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

இப்பவும் அவன் ச்சாட் பண்ணிகிட்டு, போன் பேசிகிட்டு தான் இருக்கான். பெத்தவங்க குடுக்குற செல்லம் தான் இந்த மாதிரியான பசங்கள ரொம்பவே கெடுக்குது. அதுக்காக எந்நேரமும் சந்தேகக் கண்ணோடு பாக்கணும்னு சொல்லல. ஆனாலும் கொஞ்சம் கவனமாவும் இருக்கணும். ஆண் பெண் நட்பு சகஜமாகிட்டு வரும் காலமிது. ஆனாலும் அது நட்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் பட்சத்தில் தவறாகப் போகாது. டீன்-ஏஜ் வயசுல இனக்கவர்ச்சி ஏற்பட்றது தவிர்க்க முடியாத விசயம் தான். அந்த அபாயத்துல இருந்து தங்கள வெளில கொண்டுவர்றது தான் இவங்களுக்குப் பெரும்பாடு. தலைமுறை இடைவெளி, நட்பு வட்டாரம், காதல், காமம், கெட்ட பழக்க வழக்கங்கள், படிப்பு, திமிர்.. இப்டி எல்லாமே ஒருசேர கலந்து குழப்புற வயசு தான் இந்த டீன்-ஏஜ் பருவம். இது பெத்தவங்களையே விரோதியா பாக்க வைக்கும். தங்களோட வாழ்க்கையையே நிர்ணயிக்கிறது இந்த வயது தான்ங்குறத இவங்க புரிஞ்சுக்குறதில்ல. இந்த வயசுல இவங்க எடுக்குற முடிவுகளோட பாதிப்பு, வாழ்க்கையோட கடைசி நாள் வரைக்கும் ப்ரதிபலிக்கும்.சாதாரண விஷயம் தானே... சகஜமா நடக்குற சம்பவம் தானேனு தோணலாம். ஆனா சின்னச் சின்ன தவறுகள் தான் பெரிய பாதிப்புக்கு காரணமா அமையும். எதையும் தெரிஞ்சுக்கணும்குற ஆர்வம் தான் இவங்கள தவறு செய்ய தூண்டுது.

“நீ தப்பு பண்ணிகிட்டு இருக்க. ஆனா அது தப்புனு உனக்குப் புரியுற நேரத்துல, அதுக்காக மன்னிப்பு கேக்குற சந்தர்ப்பம் உனக்குக் கெடைக்காமலே போகலாம்“னு ஒரு வசனம் உண்டு. இது தான் இன்னைக்கு இவங்களோட நிலைமையும். பெத்தவங்க இவங்ககிட்ட தோழமையோட பழகும்போதும், வெளிப்படையா எண்ணங்கள பகிர்ந்துக்கும்போதும் இந்த மாதிரியான தப்புக்கள் குறைய வாய்ப்பிருக்கு. திணிக்கப்படாத அக்கறைகளும் சரியான வழிகாட்டுதல்களும் தான் இந்தப் பருவத்தில் இவர்களுக்குத் முக்கியமாகத் தேவை.