Friday, June 10, 2011

டீன்-ஏஜ் ஜாக்கிரதை...

தொழில்நுட்பம் என்கிறது நம்மளோட அறிவ வளத்துக்குறதுக்கும் தகவல்கள தெரிஞ்சுக்குறதுக்கும் உபயோகமா இருக்குற சாதனம் தான். ஆனா இன்னைக்குள்ள வாழ்க்கை முறைல இளைஞர்களோட வாழ்க்கைப் பாதையை வெகுவா மாத்துறது இந்த தொழில்நுட்பங்கள் தான்னு சொல்லலாம். முக்கியமான உதாரணமா இணையத்த சொல்லலாம். இளைஞர்கள்னு கூட சொல்ல முடியாது. சின்னப் புள்ளைய்ங்க கூட அசால்ட்டா இன்டர்நெட் யூஸ் பண்ணுதுங்க. கேம்ஸ் விளையாட்றதுல தொடங்கி பெரிய பெரிய விஷயங்களெல்லாம் தானா கத்துக்குதுக. அது நல்ல விசயமா இருந்தா பரவாயில்லை.. ஆனா தேவையில்லாத வேலையெல்லாம் இணையத்துல பண்றாய்ங்க.

தப்பான பேர்ல ச்சாட் பண்றதுல ஆரம்பிச்சு கண்ட கண்ட இணையதளத்த மேயுறது வரைக்கும் எல்லா 420 வேலையும்செய்றானுங்க.

என் பக்கத்து வீட்டுல குடியிருக்குறவங்களுக்கு பத்தாவது படிக்கிற ஒரு பையன் இருக்கான். அவங்களுக்குப் படிப்பறிவு கம்மி, ஆனாலும் நல்ல வசதியானவங்க. அவன் ஒரே பையன்குறதுனால அவன் கேட்டான்னு கம்ப்யூட்டர், செல்போனெல்லாம் வாங்கி குடுத்துருக்காங்க. அந்தப் பையன எனக்குச் சின்ன வயசுலருந்தே தெரியும்குறதுனால என்கிட்ட நல்லா பேசுவான்.

பாக்குறதுக்கு ரொம்ப அப்பாவி மாதிரி இருப்பான். ஆனா கம்ப்யூட்டர்ல உக்காந்துட்டான்னா எப்ப பாத்தாலும் ஆர்குட், ஃபேஸ்புக், ச்சாட்டிங்னு தான் அவனோட பொழுது கழியும். ஆரம்பத்துல நா கூட இவன ரொம்ப நல்ல்ல்வன்னு நெனச்சேன். ஆனா என்னோட தோழி ஒருத்திகிட்டயே தப்பான பேர்ல இவனோட ச்சாட்டிங் வேலைய காமிச்சு என்கிட்ட மாட்டிகிட்டான். அப்புறம் தான் தெரிஞ்சது, இவன் படிக்காம கண்ட கண்ட இணைதளமெல்லாம் நைட்ல பாக்குறன்னு. அது மட்டுமில்லாம ரெண்டு பொண்ணுங்ககிட்ட ச்சாட்டிங்கல லவ் டயலாக் விட்டுகிட்டு இருக்கான்னு தெரியவந்துச்சு. கூப்ட்டு கண்டிச்சேன். இவனுங்களுக்குத்தான் அட்வைஸ் பண்றவங்களப் பிடிக்காதே. என்கிட்ட பேசுறத நிறுத்திட்டான். அவங்க அம்மா கிட்ட சொன்னதுக்கு “அவன் சின்னப்புள்ளமா, அந்தளவுக்கெல்லாம் விவரம் இல்லாதவன், நீ வீணா எதையாவது சொல்லாத“னு என்கிட்ட கோவப்பட்டாங்க.

அவனுக்கு மிஞ்சிப்போனா பதினஞ்சு வயசு தான் இருக்கும். அவன கண்டிச்சாலும் அட்வைஸ் பண்ணினாலும் எடுத்துக்கொள்ளாத பருவம் இது. ஆனாலும் அவன தனியா கூப்ட்டு “சகோதரனா நெனச்சு உனக்கு ஒரே ஒரு அட்வைஸ் பண்றேன். கேக்குறதும் கேக்காததும் உன் இஷ்டம்“னு சொன்னேன். அவன் வழக்கமான ஏளனச் சிரிப்போட “ஆரம்பிச்சுட்டீங்களா“ங்குற மாதிரி பாத்தான்.

“இந்த வயசுல உனக்கு எல்லாமே சகஜமா தெரியலாம், இதுலென்ன தப்பிருக்கு?னு தான் தோணும். ஆனா ஒண்ணு மட்டும் மனசுல வச்சிக்க. சில வருஷத்துக்கப்புறம் ஒரு மெச்சூரிட்டி வரும்போது உன்னப்பத்தி நீ நெனச்சுப் பாக்குற நேரத்துல, பெருமையா நெனைக்கலனாலும் “நாமளா இவ்ளோ கேவலமா நடந்துகிட்டோம்“னு தோணிடக் கூடாது. அடுத்தவன் முன்னாடி நீ நல்லவன் மாதிரி நடிச்சிட்டுப் போயிடலாம். ஆனா உனக்கு நீ உண்மையா இரு. அந்தந்த வயசுல உனக்கு கெடைக்க வேண்டியதெல்லாமே கட்டாயம் கெடைக்கும். இப்போ உனக்குப் படிப்பு தான் முக்கியம். உங்கம்மா உன் மேல வச்சிருக்குற நம்பிக்கைய கெடுத்துக்காத. இதுனால உனக்கு என் மேல வெறுப்பு கூட வரும். ஆனா சொல்லனும்னு தோணுச்சு சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்“னு நேருக்கு நேரா அவனோட கண்ணப் பாத்து சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

இப்பவும் அவன் ச்சாட் பண்ணிகிட்டு, போன் பேசிகிட்டு தான் இருக்கான். பெத்தவங்க குடுக்குற செல்லம் தான் இந்த மாதிரியான பசங்கள ரொம்பவே கெடுக்குது. அதுக்காக எந்நேரமும் சந்தேகக் கண்ணோடு பாக்கணும்னு சொல்லல. ஆனாலும் கொஞ்சம் கவனமாவும் இருக்கணும். ஆண் பெண் நட்பு சகஜமாகிட்டு வரும் காலமிது. ஆனாலும் அது நட்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் பட்சத்தில் தவறாகப் போகாது. டீன்-ஏஜ் வயசுல இனக்கவர்ச்சி ஏற்பட்றது தவிர்க்க முடியாத விசயம் தான். அந்த அபாயத்துல இருந்து தங்கள வெளில கொண்டுவர்றது தான் இவங்களுக்குப் பெரும்பாடு. தலைமுறை இடைவெளி, நட்பு வட்டாரம், காதல், காமம், கெட்ட பழக்க வழக்கங்கள், படிப்பு, திமிர்.. இப்டி எல்லாமே ஒருசேர கலந்து குழப்புற வயசு தான் இந்த டீன்-ஏஜ் பருவம். இது பெத்தவங்களையே விரோதியா பாக்க வைக்கும். தங்களோட வாழ்க்கையையே நிர்ணயிக்கிறது இந்த வயது தான்ங்குறத இவங்க புரிஞ்சுக்குறதில்ல. இந்த வயசுல இவங்க எடுக்குற முடிவுகளோட பாதிப்பு, வாழ்க்கையோட கடைசி நாள் வரைக்கும் ப்ரதிபலிக்கும்.சாதாரண விஷயம் தானே... சகஜமா நடக்குற சம்பவம் தானேனு தோணலாம். ஆனா சின்னச் சின்ன தவறுகள் தான் பெரிய பாதிப்புக்கு காரணமா அமையும். எதையும் தெரிஞ்சுக்கணும்குற ஆர்வம் தான் இவங்கள தவறு செய்ய தூண்டுது.

“நீ தப்பு பண்ணிகிட்டு இருக்க. ஆனா அது தப்புனு உனக்குப் புரியுற நேரத்துல, அதுக்காக மன்னிப்பு கேக்குற சந்தர்ப்பம் உனக்குக் கெடைக்காமலே போகலாம்“னு ஒரு வசனம் உண்டு. இது தான் இன்னைக்கு இவங்களோட நிலைமையும். பெத்தவங்க இவங்ககிட்ட தோழமையோட பழகும்போதும், வெளிப்படையா எண்ணங்கள பகிர்ந்துக்கும்போதும் இந்த மாதிரியான தப்புக்கள் குறைய வாய்ப்பிருக்கு. திணிக்கப்படாத அக்கறைகளும் சரியான வழிகாட்டுதல்களும் தான் இந்தப் பருவத்தில் இவர்களுக்குத் முக்கியமாகத் தேவை.

No comments:

Post a Comment