Thursday, March 31, 2011

வருகிறது பேஸ்புக் இமெயில் சேவை

பேஸ்புக் இணையதளம், தன் 50 கோடி நேயர்களுக்காக, இமெயில் சேவையினைத் தொடங்குவதாக அறிவித்தது, இணைய உலகில் பெரிய செய்தியாக வலம் வருகிறது. இன்னும் இரண்டொரு மாதங்களில் இது கிடைக்கும் என இதன் தலைமை நிர்வாகி ஸக்கர் பெர்க் அறிவித்துள்ளார்.

இதில் இமெயில் என்பது பேஸ்புக் மெசேஜஸ் ( Facebook Messages ) என்பதின் ஒரு பகுதியாகத் தான் இருக்கும். இந்த சிஸ்டத்தில் இமெயில், பேஸ்புக் மெசேஜ், எஸ்.எம்.எஸ். மற்றும் சேட் எனப்படும் அரட்டை வசதி ஆகிய அனைத்தும் கொண்டதாக அமையும். இவற்றின் மூலம் தங்களுக்குப் பிடித்த வகையில், தகவல்களையும் கோப்புகளையும் வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம். இமெயில் கணக்கு வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு, அவர்கள் பயனாளர் பெயர் இணைந்த @Facebook.com என்ற இமெயில் முகவரி தரப்படும். இதனைப் பயன்படுத்தி, பேஸ்புக் மட்டுமின்றி வேறு எந்த இமெயில் நெட்வொர்க் அக்கவுண்ட்டிற்கும், மெயில் அனுப்பிப் பெறலாம். விரைவில் ஐ-போனிலும் இது அமல்படுத்தப்படும் என்றும், அதற்கென 15 தகவல் தொழில் நுட்ப பொறியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இமெயில் பிரிவில் கீழ்க்காணும் வசதிகள் தரப்படும்.

1. இமெயில் மூலம் பேஸ்புக் மற்றும் வெளி நெட்வொர்க்குகளில் உள்ளோருடன் தொடர்பு மற்றும் தகவல், கோப்புகள் பரிமாற்றம்.

2. இருவருக்கு இடையே உள்ள அனைத்து தொடர்புகளும், ஒரே உரையாடலாக அமைக்கப்படும். இவை வெவ்வேறு தலைப்பில் இருந்தாலும், ஒரே உரையாடலாகவே கிடைக்கும்.

3. மற்ற இமெயில் தளங்களில் இல்லாத ஒரு வசதி இதில் தரப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. உங்கள் இமெயில்களில் அதிக முக்கியத்துவம் கொண்டவை அனைத்தும் தனியே முன்னுரிமை தொகுப்பாக வைக்கப்படும். இவற்றிற்கு சிறப்பு போல்டர்கள் தரப்படும். அதே போல முக்கியமானவர்கள் என நீங்கள் கருதும் ஒருவரின் மெயில்களும் பாதுகாக்கப்பட்டு தனியே போல்டரில் கிடைக்கும்.

பேஸ்புக் மெயில் வசதி, வரும் சில மாதங்களில் இன்விடேஷன் மூலம் தரப்படும். தற்போது நீங்கள் உங்களுக்கான இமெயில் முகவரியினை, முன்கூட்டியே பதிவு செய்து வைத்திட வசதி தரப்பட்டுள்ளது. பேஸ்புக் மெசேஜ் பக்கத்தில் இதற்கான அறிவிப்பினைக் காணலாம்.

இந்த வசதி, பேஸ்புக், கூகுள் நிறுவனத்தை நோக்கி எறியும் புதிய அம்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் ஒரே இரவில், அனைத்து ஜிமெயில் பயன்படுத்துபவர்களும், அதனை விட்டுவிட்டு பேஸ்புக் இமெயிலுக்கு மாறுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சில மாதங்களுக்குப் பின், இமெயில் சேவை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என அனைவரும் குறிப்பிடும் வகையில், எங்கள் சேவை இருக்கும் என பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கூகுள் தன் தேடும் வசதிகளுடன் தரும் பிற வசதிகள் அனைத்தையும், பேஸ்புக் தர முயற்சிக்கிறது. போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வது, உடனடி மெசேஜ் விண்டோ, ஸ்கைப் உடன் இணைந்து வீடியோ அழைப்பு அமைத்தல் ஆகியவையும் கிடைக்கின்றன. இப்படி இலவச சேவைகளை இந்த முன்னணி நிறுவனங்கள் தருவது நமக்கு நல்லதுதானே. நம்ம காட்ல மழைதான் என்று இப்போதைக்குச் சொல்லிக் கொள்ளலாம்.

Monday, March 28, 2011

நினைவுப் புதையலில் மட்டும்...

நாட்கள் நகர்கின்றன
வாரங்களும் ஓடுகின்றன
மாதங்களும் வழிந்தோடுகின்றன!

நினைவுப் புதையலில் மட்டும்
அள்ள அள்ளக் குறையாமல் நீ!
நகரவும் இல்லை, வழிந்தோடவுமில்லை

எல்லாமே மாறுகின்றன
என்னைச் சுற்றி...
என் மனமோ உன்னைச் சுற்றி..
அழுத்தமாய் பற்றி...!

திருவிழாக் கூட்டத்தில்
தனித்துவிடப்பட்ட தலைமகன் நான்!
தொலைத்தவள் நீ...

தேம்பியழ வழியில்லை...
அழுது புலம்ப வகையுமில்லை!


முகம் முழுவதும் புன்னகை; ஆனால்
விரக்தியின் லேசான தீற்றலில் கண்கள்!

உள்ளங்கையில் திட ரேகைகள்; ஆனால்
உள்ளமெங்கிலும் கவலை ரேகைகள்!

நடையினில் கம்பீரம் குலையவில்லை; ஆனாலும்
நடுக்கத்தின் நாற்றாங்கால் செழிப்பாய் இருக்கிறது!

வெளிச்சமாய் வண்ணமயமாய் இருக்கிறது உலகம்!
இருளாய் மாயைகள் நிறைந்ததாய் இருக்கிறது என் மனவுலகம்!

பிரியுமா பிரியம்....!

என் ஞாபகங்கள்
எப்போதாவது வந்தால்
உன் குழந்தையை கிள்ளிவிடு
நான் உனக்காய் அழுவதும்
உனக்கு ஞாபகம் வரட்டும்...

உனை பிரியமாய் பார்த்த
அதே கண்களால்த்தான்
உன் பிரிவையையும்
பார்க்க வைத்து
குருடாக்கினாய்
என் கண்களை...

எனை சந்திக்காமல்
இருக்கத்தான்
இடம் பெயர்ந்தாய்
என்று சொல்லி இருந்தால்
நான் உனக்காய்
என் உயிரை
சாகடித்திருப்பேனே…

என் கவிதைகளை
பிடித்த அளவுக்கு
உனக்கு என்னை
பிடிக்கவில்லை
அதனால்த்தானோ
என்னை விட்டு
பிரிகிறது உன்னை
போல் என்
கவிதைகளும்...

காதலுக்கு கண் இருக்கிறது
காதல் பிரிவுக்குத்தான்
கண் இல்லை
ஆமாம் நான்
பாக்கக் கூடியதாய்
நீ பாக்காமல்
பிரிந்து போனாயே..
.

Saturday, March 5, 2011

ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!

திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு.

ஆனந்தமான திருமண உறவுக்கான ரகசியங்கள் எவை என்பது குறித்து 4 ஆயிரம் தம்பதியரிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

எப்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும், மிக மகிழ்ச்சியாவுகம் இருக்கிறீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, அவர்கள் அளித்த பதில்கள் மூலம் ஆனந்தமான திருமண பந்தம் எப்போதும் நீடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் பகுத்துள்ளனர் என்று 'தி டெலகிராப்' இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன:

* நாளொன்றுக்கு 4 முறையேனும் கட்டியணைக்க வேண்டும். அதாவது, வீட்டை விட்டுக் கிளம்பும்போதோ அல்லது வீட்டுக்குள் நுழையும்போதோ.

* மாதத்துக்கு 7 மாலை நேரங்களில் கணவன் - மனைவி ஒன்றாக பொழுதைக் கழிக்க வேண்டும். அதில், வெளியே சென்று இரண்டு முறை டின்னர் சாப்பிட வேண்டியது கட்டாயம்.

* மாதத்துக்கு இரு முறை காதலுணர்வுடன் கணவனும், மனைவியும் மாலை வேளையில் ஒரு சிறிய வாக்கிங் போக வேண்டும்.

* குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரை தவிர்த்துவிட்டு, கணவனும் மனைவியும் தனியாக, மாதத்துக்கு ஒரு முறை ஓட்டலுக்கோ அல்லது சினிமா தியேட்டருக்கோ செல்ல வேண்டும்.

* மாதத்துக்கு ஒருமுறையேனும், கணவன் தனது மனைவிக்கு பூச்செண்டு போன்ற ஏதேனும் ஒரு கிஃப்ட் வழங்க வேண்டும்.

இவற்றை எப்போதும் கடைப்பிடித்து, அன்பைப் பறிமாறிக் கொண்டிருந்தால்... திருமண வாழ்க்கை இனிதாக தொடரும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.