Tuesday, March 31, 2009

நேனோ - ஒரு சரித்திரத்தின் வரலாறு (பாகம் 1)

2003 ஆம் வருடம் அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது. மும்பையிலிருந்த விக்டோரியன் சாண்ட்ஸ்டோன் கட்டிடத்தில் உள்ள பெரிய கான்ஃபரன்ஸ் ரூமில் அந்த ஐந்து பேரும் குழுமியிருந்தனர். உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்த, பலராலும் பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்ட அந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக புனேயிலிருந்து வந்திருந்தனர்.

ஒரு நாள் முன்பாகத்தான் அந்த அழைப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தது. அந்த அழைப்பு வந்திருந்தது வேறு யாரிடத்திலிருந்துமல்ல, அந்நிறுவனத்தின் தலைவரிடமிருந்துதான் (யாருடைய வார்த்தைகள் நிறைவேற வாய்ப்பில்லை என்று உலகால் கருதப்பட்டதோ! அவரிடமிருந்துதான்). அந்த நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாட்டா!!

அந்த சந்திப்பிற்கு சில நாட்கள் முன்புதான் ஜெனீவாவில் நடந்த ஆட்டோ ஷோவில் அவர் 1 லட்ச ரூபாயில் கார் உருவாக்குவது பற்றி பேசியிருந்தார். ஆரம்பத்தில், குறைந்த விலையில் கார் என்ற எண்ணம் உருவான போது விலை எதுவும் நிர்ணயமாகியிருக்க வில்லை. ஆனால் ஊடகங்கள் அதனுடைய விலையை 1 லட்சம் என்று நிர்ணயித்து விட்டன.

முடியுமோ, முடியாதோ, அவர்கள் அந்த சவாலை ஏற்றனர். எந்த வார்த்தைகளுக்காக, ஆட்டோமொபைல் என்ஜினியரிங்கிலுள்ள விதிகள் மாற்றி எழுதப் பட வேண்டியிருந்ததோ, அந்த வார்த்தைகளுக்காகவே அந்த சவாலை அவர்கள் ஏற்றனர். ஸ்டீலின் விலை தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருக்கும் நிலையிலும் அந்த சவாலை அவர்கள் ஏற்றனர்.

இந்த சந்திப்பிற்கு அவர்கள் வந்தபோது, அவர்களுக்கு தெரிந்திருந்ததெல்லாம் இந்த சந்திப்பு கண்டிப்பாக டாட்டா தெரிவித்திருந்த குறைந்த விலை காருடன் தொடர்புடையதாக இருக்ககூடும் என்பதுதான்! ஆனால் அவர்களுக்கு தெரியாத ஒன்று இருந்தது, அது அவர்களுடைய அடுத்த நான்கு வருடங்கள் பல்வேறு தோல்விகளையும், முடிவில் தலைக்கணம் தரக்கூடிய வெற்றியையும் கொண்டிருக்கப் போகிறது என்பதுதான். இதில் கடினமான விஷயம் என்னவென்றால் இந்த விஷயங்கள் யாவற்றையும் யாரிடமும், ஏன் தங்கள் துணையிடம் கூட பரிமாறிக் கொள்ள முடியாது என்பதுதான்!

அந்த சந்திப்பில், 60 ஸ்லைடுகள் கொண்ட பிரசண்டேசன் மூலம் அவர்கள் விவாதிதது எல்லாம், அப்போது நடைமுறையிலிருந்த அனைத்து வகை குறைந்த விலை போக்குவரத்து முறையைத்தான் (Low cost models of personal transport). இவற்றில் மோட்டார் பைக், ஸ்கூட்டர், ஆட்டோ ரிகஷா மற்றும் அவர்களுடைய சொந்த படைப்பான இண்டிகா கார் அனைத்துமே அடங்கியிருந்தன.

தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று திட்டவட்டமாக அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை. தவிர டாட்டாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள விரும்பினர். ரத்தன் டாட்டா அவரது கனவை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார். அவர் உருவாக்க நினைத்ததெல்லாம், உலகின் மிக குறைந்த விலையில் ஒரு கார், எதனுடைய விலை மோட்டார் பைக்கின் விலையை விட சற்றே அதிகமாக இருக்க கூடியதும், எதனுடைய அறிமுகம் ஆட்டோ மொபைல் இண்டஸ்ட்ரியில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடியதோ, அத்தகைய காரைத்தான் அவர் உருவாக்க விரும்பினார்.

அத்தோடு நிற்கவில்லை அவர், அந்த காரை உருவாக்கப் போகும் குழுவில் ஒருவராகவும் மாறினார். அவர் கூறிய மற்றொரு வாக்கியம் 'இது போன்ற காரை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமே உருவாக்க முடியும்' என்பதுதான்.

ஊட்டச்சத்து மாத்திரைகளை விட, ஊக்கம் தரக்கூடிய வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்தான். ஏனெனில் அந்த சந்திப்பு முடிந்த போது, அவர்கள் அனைவரும் இந்தியாவின் மிகச் சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு மனிதனால் ஒரு சரித்திரத்தை படைப்பதற்காக தூண்டப்பட்டிருந்தனர்.

அடுத்த ஒன்றரை வருடங்களில், அந்த திட்டம் மிகப் பெரிய வளர்ச்சி எதையும் கண்டிருக்க வில்லை. எந்த மாதிரி காரை தாங்கள் உருவாக்கப் போகிறோம் என்பதைக் கூட அவர்களால் நிர்ணயிக்க முடியவில்லை. பாதுகாப்புக்காக பிளாஸ்டிக் அ) கேன்வாஸ் ஷீட் கொண்ட ஒரு திறந்த வகை கார் அமைப்பைக் கூட அவர்கள் யோசித்து வைத்திருந்தனர். அவர்களுடைய பிரச்சனை என்னவென்றால், காரை அவர்கள் வடிவமைக்கும் போதெல்லாம் அவர்கள் மனதில் மோட்டார் பைக்கின் வடிவமே மேலோங்கியிருந்தது.

இதில் மிகப் பெரிய சவால் என்னவென்றால், இந்த ப்ராஜக்ட் ஆரம்பமாகும் போது அவர்களிடம் எந்தவொரு மாதிரித் திட்டமோ (மாடல் பிளானோ), பெஞ்ச்மார்க்கோ கிடையாது என்பதுதான். ஏன், ரத்தன் டாட்டாவின் மனதில் இருந்தது கூட 4 பேர்கொண்ட குடும்பம் ஸ்கூட்டர் ஓட்டிச் செல்வது போன்ற ஒரு நினைவலையும், தெளிவில்லாத ஒரு கனவும்தான்.

இத்தகைய பின்புலம் கொண்ட ஒரு திட்டம் எப்படி மெய்பட்டது? என்னென்ன விதமான பிரச்சனைகளை அவர்கள் சந்தித்தனர்? 2001ல் ஏறக்குறைய 500 கோடி நட்டத்தை சந்தித்திருந்த ஒரு நிறுவனத்தால் இது எப்படி சாத்தியப்பட்டது? இன்னும் பல ஆக்கப்பூர்வமான தகவல்களோடு மீண்டும் சந்திப்போம் (பாகம்-2ல்)!!!

Friday, March 20, 2009

"குடிப் பழக்கம்" ஒரு நோயா அல்லது மனபலவீனமா?

மனிதன் இந்த மண்ணில் தோன்றிய காலத்திலிருந்தே மது அருந்தும் பழக்கமும் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஈரான் நாட்டின் மேற்கிலுள்ள கோடின்தேபே என்ற சுமேரிய ஊரில் 6000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வாழ்ந்த மக்கள் ஒயினும், பீரும் அருந்தியிருக்கிறார்கள் என்பது, அங்கிருந்து அகழ்வாராய்ச்சி செய்து எடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மெசபடோமியா நாட்டு மக்கள் தானியங்களைப் புளிக்கவைத்து அவற்றிலிருந்து மதுதயாரித்து அருந்தியுள்ளனர். பல நூற்றாண்டுகளாக, மதுவை மக்கள் இறைவழிபாட்டிலும், மருந்தாகவும் பயன்படுத்தி வந்தாலும், பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்தினர் என்று வரலாறு கூறுகிறது.

முதன் முதலில் மனிதனால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் "ஹமுராபி" என்னும் சட்டத் தொகுப்பில் உள்ள மதுவைப் பற்றிய குறிப்புகளில், அதை எவ்வாறு அருந்தவேண்டும், எப்படி விற்பனை செய்யவேண்டும் என்பதற்கான வரை முறைகள் இருந்திருக்கின்றன. கி.பி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பாபிலோனிய மக்களிடம் இருந்த மதுப் பழக்கத்தால், சமுதாயத்தில் நிலவிய பிரச்சினைகளுக்கும் இந்நூல் ஆதாரமாக இருக்கிறது.

மாவீரன் அலெக்ஸாண்டர், கி.மு.330 ஆம் ஆண்டு பெர்சபோலிஸ் நகரில் இருந்த அரச மாளிகை தீக்கிரையான போது அவன் மதுபோதையில் இருந்ததாக புளுத்தார்க் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவன் மதுநோய்க்கு அடிமையாகித்தான் இறந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக நமது இந்திய நாட்டில் இருந்துவரும் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட தீய விளைவுகளை இதிகாசங்களும், யோகிகளும் கண்டித்து வந்ததாக வரலாறு கூறுகிறது.

மது அருந்தும் பழக்கமுள்ளவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், முதியோர்களைவிட இளைஞர்களும், பெண்களைவிட ஆண்களும், தொழிலாளிகளைவிட அலுவலகத்தில் பணியாற்றுவோரும்தான் அதிகம் எனத் தெரிகிறது.

அமெரிக்க மக்களில் 33 சதவீதமும், இத்தாலியில் 36 சதவீதமும், பிரான்ஸில்38 சதவீதமும் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

மூன்றாண்டுகளுக்கு முன்பு, இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஓர்ஆய்வின்படி, குறிப்பிட்ட சில சமுதாயங்களில் ஆண்களில் 50 சதவீதமும், பெண்களில் 20 சதவீதமும் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் குடிப்பழக்கம் உள்ள 400 பேர்களிடம் "நீங்கள் எதற்காகக் குடிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது அவர்களிடமிருந்து தெரியவந்தது:

# 32.75 % பேர் - போதைக்காக
# 24.00 % பேர் - தொழில் களைப்பைப் போக்கிக்கொள்ள.
# 22.25 % பேர் - கவலைகளை மறக்க.
# 05.00 % பேர் - இரவில் நன்றாகத் தூங்க.
# 04.50 % பேர் - உடல் உபாதைகளை மறக்க.
# 03.75 % பேர் - உடல் சூட்டைத் தணித்துக்கொள்ள.
# 03.75 % பேர் - காதல் தோல்வியை மறக்க.
# 02.75 % பேர் - பிள்ளைகளால் ஏற்படும் கவலைகளை மறக்க.
# 01.25 % பேர் - மனைவி தரும் தொல்லையை மறக்க.
# 01.00 % பேர் - உடல் உறவுகொள்ள.

மது அருந்தும் அத்தனை பேருமே குடி நோயாளிகள் அல்ல என்பது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு மூலம் தெரியவந்தது. அங்கே 10 கோடி பேர் மதுவருந்தினாலும், ஒரு கோடி பேர் மட்டுமே மது சம்பந்தமான நோய்களினால் பாதிகப்பட்டுள்ளனர்.

அதுபோலவே, பிரான்ஸ் நாட்டில் மது அருந்தும் கோடிக்கணக் கானவர்களில் 15 சதவீதம் மட்டுமே மது சம்பந்தமான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாவது ஒரு நோயா அல்லது மனபலவீனமா?

தொடக்கத்தில் இது "மனபலவீனம்" என்று கருதப்பட்டு வந்தது. 1956ல் தான் 'தீவிர மதுப்பழக்கம் ஒரு நோய்' என்பதை ஏற்றுக் கொண்டது "அமெரிக்க மருத்துவ சங்கம்".

Saturday, March 14, 2009

"விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!

இந்து சமயத்தில் கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்து கொடுப்பதில்லை. விதவைகள் மறுமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்பதை உலகுக்குக் காட்டவே, நபிகள் நாயகம் பல விதவைப் பெண்களை மணம் செய்துகொண்டார்.

ஒரு இளம்பெண் விதவை ஆகிவிட்டால், அவளை உடனே வேறு ஒருவனுக்கு கட்டிவைக்கவேண்டும். இல்லையேல் அவ்ள் வாழ்க்கையில் சிதறுண்டு அழிந்துபோவாள். இதை உணர்த்துவதாகவே அமைந்திருக்கிறது ஒரு வேளாண்மையில் வழங்கப்படும் பழமொழி.

"அறுத்தால் கட்டு! அல்லது அழியும்!" - என்பதே அப்பழமொழி.

"வயலில் நெற்கதிர்களை அறுத்தால் உடனே கட்டிவைக்கவேண்டும். இல்லையேல் அவை சிதறி அழிந்துபோகும்." என்பது பற்றி உருவான பழமொழி அது.

அவதான அருங்கலை விநோதராகவும், புலவர்களுக்குப் புலவராகவும், பாவலராகவும், நாவலராகவும் விளங்கிய செய்குத்தம்பிப் பாவலர் ஒரு சமயம் குமரி மாவட்டத்தில், திருவிதாங்கோடு என்னுமிடத்தில் சீறாப்புராணச் சொற்பொழிவில் இப்படிக் கூறியுள்ளார். 'விதவை மறுமண'த்தை ஆதரித்த பெருந்தகையாளர் அவர் என்பது அவ்ர் சொற்பொழிவுகளிலிருந்து தெரியவருகிறது.