Friday, February 20, 2009

ஒன்பது வயதில் "இளம் தவில் இசைக்கலைஞர்"

"ஒன்பது வயதில்" இளம் தவில் இசைக்கலைஞர் சிவராமகணேசன் : அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் கீழ ரத வீதியில் வசித்து வரும் "ஆலடி அருணா - கிருஷ்ணவேணி" நாதஸ்வர தம்பதிகளின் ஒன்பது வயது மகன் சிவராம கணேசன் தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பிலும் வகுப்பில் முதல் மாணவராக திகழ்கிறார்.


சிவராம கணேசனுக்கு 3 1/2 வயதிலேயே "கலைமாமணி" நாதஸ்வர வித்வான் எம்.பி.என்.பொன்னுச்சாமி தலைமையில் முதல் அரங்கேற்றம் நடந்தது. ஸ்ரீ ராகத்தில் ஒரு கீர்த்தனையை தவிலில் வாசிக்க, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேட்டு ரசித்து பாராட்டிய அங்கீகாரம், முதல் வெளிநாட்டுப் பயணமாக பாரீஸ் நாட்டிற்கு ஒரு மாத பயண அனுபவம், ஒரு திருமண நிகழ்வில் பின்னணிப் பாடகர் வைத்தியநாதன், நடிகர் சிவக்குமார், மருத்துவர் ராமதாசு, கே.கே. எஸ்.எஸ்.ஆர், பேச்சாளர் குமரி ஆனந்தன், சமீபத்தில் மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்களின் பாராட்டுக்கள்!

தமிழக அரசின் "கலை இளம் மணி 2008" விருது உள்பட பத்துக்கும் மேற்பட்ட விருது பட்டியல்கள், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் தந்த ஊக்கங்கள், 95 தாளங்களும் தவில் இசையில் வாசிக்கும் திறமை, தொடர்ந்து தற்போது 3 மணி நேரம் தவில் வாசிக்கும் சிவராம கணேசனுக்கு தொடர்ந்து 12 ம்ணி நேரம் தவில் வாசித்து கின்னஸ் சாதனை புரிய ஆசை. மேலும் இந்த இளம் தவில் இசைக்கலைஞருக்கு மார்த்தாண்டம் பக்கத்தில் "புதுக்கடை" என்ற கிராமத்தில் வயது வித்தியாசமின்றி ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வலையப்பட்டி" எ.ஆர்.சுப்ரமணியம், "ஹரித்துவாரமங்கலம்" எ.கே.பழனிவேல், "தஞ்சாவூர்" டி.ஆர். கோவிந்தராஜன் இவர்களைப் போல ஒரு பெரிய தவில் இசைக்கலைஞராக எதிர்காலத்தில் வரவேண்டும் என்பதான் சிவராம கணேசனின் இலட்சியம்! ஒரு கையில் பள்ளிக்கூட பையை தூக்கிக் கொள்ளும் நேரத்தின் இடையே தினமும் ஒரு மணி நேர தவில் வாசித்து விட்டுச்செல்லும் பூரிப்பும், இன்னும் மழலைத்தனம் குறையாத இந்த இளம் தவில் இசைக்கலைஞர் சிவராம கணேசனுக்கு தனி அழைப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இப்போதே நிகழ்ச்சிகளுக்கு "சிறப்பு விருந்தினராக" செல்லும் இளம் தவில் இசைக்கலைஞர் சிவராம கணேசனுக்கு என் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment