
வாரங்களும் ஓடுகின்றன
மாதங்களும் வழிந்தோடுகின்றன!
நினைவுப் புதையலில் மட்டும்
அள்ள அள்ளக் குறையாமல் நீ!
நகரவும் இல்லை, வழிந்தோடவுமில்லை
எல்லாமே மாறுகின்றன
என்னைச் சுற்றி...
என் மனமோ உன்னைச் சுற்றி..
அழுத்தமாய் பற்றி...!
திருவிழாக் கூட்டத்தில்
தனித்துவிடப்பட்ட தலைமகன் நான்!
தொலைத்தவள் நீ...
தேம்பியழ வழியில்லை...
அழுது புலம்ப வகையுமில்லை!
முகம் முழுவதும் புன்னகை; ஆனால்
விரக்தியின் லேசான தீற்றலில் கண்கள்!
உள்ளங்கையில் திட ரேகைகள்; ஆனால்
உள்ளமெங்கிலும் கவலை ரேகைகள்!
நடையினில் கம்பீரம் குலையவில்லை; ஆனாலும்
நடுக்கத்தின் நாற்றாங்கால் செழிப்பாய் இருக்கிறது!
வெளிச்சமாய் வண்ணமயமாய் இருக்கிறது உலகம்!
இருளாய் மாயைகள் நிறைந்ததாய் இருக்கிறது என் மனவுலகம்!
No comments:
Post a Comment